தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் எண்ம சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

Published Date: April 1, 2025

CATEGORY: CONSTITUENCY

 தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் எண்ம சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் எம். கிறிஸ்டோபர் தலைமை வகித்தார்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இளநிலை, முதுநிலை படிப்புகளை நிறைவு செய்த 2,391 மாணவ,மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அவர் பேசியதாவது:

பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்வில் முக்கியமான தருணம், படித்த கல்லூரிக்கு பெருமை சேர்க்கும் வகையில் மாணவர்கள் சேவையாற்ற வேண்டும். துன்பங்களை கடந்து முன்மாதிரியாகவும் திகழ வேண்டும்.

கல்வி என்பது மிகப்பெரிய கடல். தற்போது கற்றது குறைந்தளவு தான், இன்னும் கற்க வேண்டியது அதிகம் உள்ளது. ஆகவே வாழ்நாள் முழுவதும் கற்கும் மாணவனாகவே இருத்தல் வேண்டும்.

நமது மாநிலத்தைப் பொறுத்தவரை கடந்த 1920 ஆம் ஆண்டு நீதி கட்சி தொடங்கிய போது அனைவருக்கும் கல்வியில் சம வாய்ப்பு ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களில் பங்களிப்பும்  இருந்தது. 

அமெரிக்கன் கல்லூரியில் பயின்று வாழ்வின் உயர்ந்த நிலையை எட்டியவர்கள் பலர். குறிப்பாக ஓவியர் மனோகர் தேவதாஸ், தமிழறிஞர் சாலமன் பாப்பையா, எங்களுடைய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சக்கரபாணி உள்ளிட்ட ஏராளமானோர் இந்த கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.

நாட்டின் பிற மாநிலங்களை விட அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. குறிப்பாக, கல்வியில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றார் அவர். 

நிகழ்வில், அமெரிக்கன் கல்லூரி ஆட்சி மன்ற குழு தலைவர் டி.ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன், துணை முதல்வர் ஏ.மார்ட்டின் டேவிட், நிதி காப்பாளர் ரூபி கமலம்  உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Media: Dinamani